சிறப்புகள்

மூலவர் ஓம் ஸ்ரீ பவானி அம்மன் வலது கையில் கத்தியினையும், வலது மேற்கையில் சக்கரமும், இடது கையில் அமுத கலசத்தையும், இடது மேற்கையில் சங்கும் கொண்டு அருள்பாளிக்கின்றாள். இத்தகைய கோலத்தினை வேறு எங்கும் காணமுடியாத அற்புத கோலமாகும். கண்ணன் தன் சகோதரியான அன்னைக்கு சங்கையும், சக்கரத்தையும் தந்துள்ளார். அன்னையில் மடியருகே அமர்ந்து நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வரும் சுயம்புவுன் தோற்றம் காலத்தால் மிக மிக தொன்iமை வாய்ததாகும். அன்னை பவானி அனைத்து சக்திகளையும் தன் உருவில் கொண்டு காட்சியளிக்கிறாள். வேத சக்தியாகவும், ஞான சக்தியாகவும், கால சக்தியாகவும், போக சக்தியாகவும், கோல சக்தியாகவும், கவி சக்தியாகவும், கருணா சக்தியாகவும், பஞ்ச சக்தியாகவும், அருள் சக்தியாகவும் காட்சி தருகிறாள்.

கோயிலைச்சுற்றியுள்ள அழகிய பிரகார மண்டபத்தின் தென் கிழக்கு பகுதியில் அற்புத சக்தி விநாயகர் சன்னதியும், அதன் பின்னால் சர்வ சக்தி சந்தோஷ மாதங்கி அம்மன் சன்னதியும் உள்ளது. பிரகாரத்தின் வடக்கு பகுதியில், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் சன்னதி, ஸ்ரீனிவாச பெருமாள் சன்னதி, ஆஞ்சநேயர் சன்னதி, பரசராமர் சன்னதி உள்ளது. கிழக்கு பகுதியில் சக்திமண்டபம் உள்ளது. திருக்கோயில் வளாகத்தின் வடமேற்கு மூலையில் அழகிய புற்றுக்கோயில் உள்ளது.

வேண்டுதல்கள்

1. வேப்பிலை ஆடை அணிந்து வலம் வருதல்:

ஆண் பெண் குழந்தைகள் என்ற எவ்வித பாகுபாடின்றி, உடம்பில் எவ்வித உடையும் அணியாமல் வேப்பிலையை ஆடையாக அணிந்து திருக்கோயிலை சுற்றி வலம் வருவது வேறு எங்கும் காணாத மிக முக்கிய பிராத்தனையாகும். அம்மை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலானோர் வேப்பிலை ஆடை அணிந்து வலம் வருவதை முக்கிய பிராத்தனையாக கொண்டுள்ளார்கள்.

2. அங்கப்பிரதட்சணம் செய்தல் :

உடல் நலம் குன்றியவர்கள் அம்மனை வேண்டிக்கொண்டு உடல் நலம் குணமான பின்பு அங்கப்பிரதட்சனம் மூலம் திருக்கோயிலை வலம் வருவதை பிராத்தனையாக கொண்டுள்ளார்கள்.

3. மாங்கல்யம் செலுத்துதல் :

அம்மனை குல தெய்வமாக கருதும் பெண் பக்தர்கள் தங்கள் திருமணத்தில் ஒரு புதிய சடங்கை வைத்திருக்கிறார்கள். அதன்படி திருமண நாள் அன்று கட்டிய தாலியை அம்மனுக்கு காணிக்கையாக்கி அம்மனின் பிரசாதமாக மஞ்சள் மற்றும் மஞ்சள் கயிறை பெற்று தங்கள் கழுத்தில் கட்டிக்கொள்கிறார்கள். குறிப்பாக மீனவ சமுதாயத்தினர் தனது கணவர் கடலுக்குச்சென்று நல்ல முறையில் திரும்பி வரவேண்டும் என்று வேண்டிக்கொண்டு தனது தாலிக்கொடியை அம்மன் உண்டியலில் செலுத்தி புதியதாக தாலிக்கொடியை கட்டிச்செல்கிறார்கள்.

4. தீச்சட்டி ஏந்தி வலம் வருதல் :

தீச்சட்டி ஏந்தி திருக்கோயிலை வலம் வந்து பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றுகிறார்கள்.

5. ஆடு, கோழி சுற்றிவிடுதல் :

இத்திருக்கோயிலில் இப்பிராத்தனை மிக முக்கியமானதாக உள்ளது. தனது குடும்பத்தில் யாருக்காவது உடல் நலம் சரியில்லாமலோ விபத்து போன்றவற்றின் மூலமாகவோ உயிருக்கு போராடும் நிலை ஏற்பட்டால் உயிர் கொடுப்பதாக அம்மனிடம் வேண்டிக்கொண்டு, உடல் நலம் பெற்றதும் ஆடு அல்லது கோழியை உயிருடன் திருக்கோயிலில் சுற்றிவிடுகிறார்கள்.

6. கரகம் பிராத்தனை செய்தல் :

நீண்ட நாட்களாக திருமணம் ஆகாதவர்கள் அம்மனுக்கு கரகம் எடுப்பதாக வேண்டிக்கொண்டு திருமணம் நிச்சயமானதும், கரகத்தை மலர்களால் அலங்கரித்து, பட்டுச்சேலை உடுத்தி கரகத்தை தலையில் ஏந்தி உடுக்கை சிலம்பு வாத்தியங்களுடன் திருக்கோயிலை வலம் வருகிறார்கள். திருமணத்திற்காக இந்த பிராத்தனை செய்யப்படுவதால், இதை குடை கல்யாணம் என்றும் அழைக்கிறார்கள்.

7. அடிதண்டம் தேங்காய் உருட்டுதல்:

அங்கப்பிரதட்சணத்திற்கு பதில் கோயில் பிரகாரத்தைச் சுற்றி ஈரத்துணியுடன் தேங்காயை உருட்டிக்கொண்டு வலம் வருவார்கள். உருண்டு வரும் தேங்காய் எங்கு நிற்கிறதோ அங்கு சாஷ்டாங்கமாக விழுந்து கும்பிட்டு மீண்டும் தேங்காயை உருட்டிச்செல்வார்கள். இதுபோன்று திருக்கோயிலை ஒன்று அல்லது மூன்று முறை சுற்றிவருவார்கள்.

8. முடிகாணிக்கை செய்தல்:

பெரும்பாலான பக்தர்கள் ஆண் பெண் குழந்தைகள் என்ற பாகுபாடில்லாமல் தனது தலை முடியினை அம்மனுக்கு காணிக்கையாக செலுத்துகிறார்கள்.

9. மாவிளக்கு ஏந்துதல்:

வயிறு சம்பந்தமான நோய் பாதிப்பிலுள்ள பக்தர்கள் நோய் குணமாக அம்மனை வேண்டிக்கொண்டு சக்திமண்டபம் எதிரே மல்லாந்து படுத்துக்கொண்டு தனது வயிற்றின் மீது மாவிளக்கு ஏற்றி வழிபடுகிறார்கள்.

10. தொட்டில் பிள்ளை:

குழந்தை இல்லாத பக்தர்கள் குழந்தை வரம் வேண்டி சக்தி மண்டபம் அருகே தொட்டில் பிள்ளை கட்டி வழிபடுகிறார்கள்.

11. துலாபாரம்:

குழந்தை வரம் வேண்டி அம்மனை வேண்டிக்கொண்ட பக்தர்கள் குழந்தை பிறந்தவுடன் குழந்தையின் எடைக்கு எடை நாணயமாகவோ, அரிசி, சர்க்கரை, கற்கண்டு, வெல்லம் போன்ற பொருட்களையோ துலாபாரமாக வழங்குகிறார்கள்.